தன்னம்பிக்கை vs முயற்சி

Posted In: Writing of India

Topic No: 18

21/7/2015, 7:36 pm#1
avatar
Lineism
NEW WRITER
முயற்சி, தன்னம்பிக்கை இவை இரண்டிற்கும் உதாரணமாக அனைவரும் கூறுவது கஜினி முகம்மது மற்றும் சிலந்தி தான். சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் முயற்சி என்பது அவசியமானதுதான். இதைத்தான் தன்னம்பிக்கை என்றும் சொல்வதுண்டு.

தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யும் அனைவரும் தங்களது இலக்கை அடைய முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், முயற்சி என்றால் என்ன? என்பதை நாம் அனைவருமே தவறாகத்தான் அர்த்தம் கொள்கிறோம். அதனால்தான் முயற்சிக்கு உதாரணமாக கஜினி முகம்மதுவையும், சிலந்தியையும் உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றோம்.

இப்படி நம்மால் சொல்லப்படும் உதாரணங்களால் சிலர் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிடுவதும் உண்டு. ஏனென்றால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கைதான் இதற்கு முக்கிய காரணம். கண்மூடித்தனமான நம்பிக்கைகள் ஒரு சிலருக்கு வேண்டுமானால் கை கொடுக்கலாம் ஆனால் அனைவருக்கும் அது வெற்றியைக் கொடுக்காது.
அப்படியானால், கஜினி முகம்மது பல முறை தோல்வி கண்ட போதும் தனது விடாமுயற்சியால் மீண்டும் மீண்டும் போருக்கு சென்று வெற்றியை அடைந்தாரே.... சிலந்தி வலை பின்னும் போது பல முறை கீழே விழுந்தும் கூட தனது விடா முயற்சியால் மீண்டும் மீண்டு சென்று வலையை கட்டி முடிக்கின்றதே இவை எல்லாம் உண்மை இல்லையா? என்று சிலர் கேட்கலாம்.

ஆனால், இங்கேதான் நாம் ஒரு விஷயத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும். சிலந்தி வலை கட்டுகிறது என்றால் அது இயற்கை. அதுமட்டுமல்லாமல் சிலந்திக்கு வலை கட்டத் தெரியம்!! அதனால் சிலந்தி மீண்டும் மீண்டும் முயன்று வலையை கட்டி முடிக்கின்றது. ஆனால், நாம் சேலை தைக்கப் பயன்படுத்தும் 'நூலை' சிலந்தியிடம் கொடுத்து வலையை கட்ட சொன்னால் சிலந்தியால் வலை கட்டிமுடிக்க முடியுமா?

இதே போல கஜினி முகம்மது மீண்டும் மீண்டும் போருக்கு சென்று வெற்றிபெற முடிந்தது என்றால் அதற்குக் காரணம்? கஜினி முகம்மதுவுக்கு "யுத்தம்" தெரியும்! அதனால் அவரால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய முடிந்தது. இதுவே நானோ அல்லது நீங்களாகவோ இருந்து, பல முறை போருக்கு சென்றிருந்தால் என்னாகியிருக்கும்?

எனவே முயற்சி என்பதும் தன்னம்பிக்கை என்பதும் அனைவருக்கும் அவசியம்தான். ஆனால், எதற்காக முயற்சிக்கின்றோமோ அதைப்பற்றிய அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்துகொண்டு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நமது முயற்சி பயனுள்ளதாக அமையும்.

எதுவுமே தெரியாமல் வெறும் முயற்சி மட்டும் செய்து கொண்டிருந்தால் கீழே விழுவது மட்டுமல்ல... ஒரு நாளில் நமது வாழ்க்கையும் தொலைந்து போய்விடும்!!

- லைனிஸம் - Lineism.

Message reputation : 100% (1 vote)
SPONSORED CONTENT